சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பேளூர் பகுதியில் ஜெயினுலாதீன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயினுலாதீனின் கடைக்கு டிப்-டாப் உடையணிந்த வாலிபர்கள் சென்று குறைந்த விலைக்கு தங்கமணி மாலை இருக்கிறது எனவும், 60 லட்ச ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். அதனை பார்த்த ஜெயினுலாதீன் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் குரங்குசாவடி பகுதியில் நாங்கள் தங்கி இருக்கிறோம், பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு தகவல் கொடுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
சில நாட்கள் கழித்து அந்த நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஜெயினுலாதீன் 25 லட்ச ரூபாய் தருகிறேன் எனவும் மீதி பணத்தை பின்னர் தருகிறேன் எனவும் கூறியுள்ளார். அதன்படி ஜெயினுலாதீன் அவர்களிடம் 25 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு தங்கமணி மாலையை வாங்கியுள்ளார். பிறகு அது போலியானது என்பதை அறிந்த ஜெயினுலாதீன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்களை காணவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயினுலாதீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.