விவசாயிகள் ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியம்மா பட்டி பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பழனி ஆர்.டி.ஓ அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது, பெரியம்மாபட்டி பகுதியில் உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலங்களை கையகப்படுத்தி அவற்றை அரசு ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளது. இதில் நாங்கள் பயிர் சாகுபடி செய்துள்ளோம்.
ஆனால் தற்போது ஏழை மக்களுக்கு வழங்கிய நிலங்களை சிலர் ஆக்கிரமித்து போலி பட்டா மூலம் விற்பனை செய்கின்றனர். இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே நிலங்களை மீட்டு தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.