தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்தது. முதலில் நண்பர் போல பேசிய அந்த நபர் வாலிபரிடம் தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பணம் கொடுத்தால் உங்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என அந்த நபர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி பல்வேறு தவணைகளாக வாலிபர் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். உடனே அந்த நபர் போலியான பணி ஒப்புதல் கடிதத்தை வாலிபரின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளார்.
அது போலியானது என்பதை அறிந்த வாலிபர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வில்பட்டி பகுதியில் தற்போது வசித்து வருவதும், அவர்தான் வாலிபரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் பாலமுருகனை போலீசார் அதிரடியாக கைது செய்து அவரிடமிருந்து செல்போன், ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.