பெண்ணின் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி தவறாக சித்தரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 30 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு துவங்கி தன்னை ஒருவர் அவதூறாக சித்தரித்து பதிவுகள் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்(32) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணும், பிரவீனும் ஒரே இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தனர்.
பிரவீன் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த காதலை ஏற்பதற்கு கடைசிவரை பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபத்தில் பெண்ணை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரவீன் அந்தப் பெண்ணின் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கியுள்ளார். இதனை அடுத்து அதில் பலரை நண்பர்களாக்கி தவறான எண்ணத்துடன் செய்திகளை அனுப்பியுள்ளார். அதன் பிறகு பிரவீனை போலீசார் கைது செய்தனர்.