நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 வெளிநாட்டவர்கள் நேற்று (நவ.28)அதிகாலை நேபாள எல்லை பகுதியில் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து பல போலி இந்திய அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, சிலிகுரியை ஒட்டி உள்ள கரிபாரி பிளாக்கில் இந்தியா-நேபாள எல்லையான பனிடாங்கியிலிருந்து ஆயுதம் ஏந்திய எல்லைப்படை வீரர்கள் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஜேம்ஸ் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமது நூருல் இஸ்லாம் போன்றோரை கைது செய்தனர். இந்தியாவில் நுழையும் முன்பு இரண்டு பேரும் எப்படி போலி இந்திய அடையாள அட்டைகளை உருவாக்கினர் என விசாரணை நடந்து வருகிறது. தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் சிலிகுரி சப்-டிவிஷனல் நீதிமன்றதிற்கு அனுப்பப்பட்டனர்.