மோசடி செய்த ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி காலங்கரை தெருவில் லீனா(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீரவநல்லூரில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லீனாவும், அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களும் அரசு உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வங்கியில் உறுப்பினராக இருக்கும் ஆசிரியர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் லீனா தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர்களின் பான் கார்டு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து 4 பேரின் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார்.
இதனையடுத்து அந்த ஆவணங்களை பயன்படுத்தி கூட்டுறவு வங்கியில் சுமார் 54 லட்ச ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பின்னர் கடனாக வழங்கப்பட்ட 54 லட்சத்திலிருந்து லீனா 13 லட்சத்தை எடுத்துள்ளார். இந்நிலையில் கூட்டுறவு வங்கி செயலாளரான பேச்சியப்பன் மற்றும் சக ஆசிரியர்கள் லீனா செய்த மோசடியை அறிந்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் லீனா, அவரது அக்காள் சலோமி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.