போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் ஜி.கே.எம் காலணியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீத்தூள் வாங்கி விற்கும் குடோன் வைத்துள்ளார். இவருக்கு சரவணன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சுரேஷ் சரவணனுடன் இணைந்து கிருஷ்ணகிரியை சேர்ந்த தொழிலதிபரான குரு தண்டபாணி(40) என்பவர் மூலமாக சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் இருக்கும் காலி இடத்தை வாங்குவதற்காக ரூ.91 லட்சம் விலை பேசியுள்ளார். அதற்கு 20 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளனர்.
அந்த பணத்தை வாங்கிய குரு தண்டபாணி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதனை அடுத்து குரு தண்டபாணி போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு சொந்தமான இடத்தை தங்களுக்கு விற்பனை செய்தது சுரேஷுக்கும், சரவணனுக்கும் தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குரு தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.