சென்னை சூளை காளத்தியப்பா தெருவில் ராஜகுமாரி பக்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், அம்பத்தூர் ஒரடகம் பகுதியில் எனக்கு சொந்தமான 24 சென்ட் நிலத்தை 2001 ஆம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த அடைக்கலம் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து தனது மகன்களான ஆனந்த்ராஜ்(57), ஜான் டேவிட் குமார்(48) ஆகியோருக்கு அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.எனவே ரூ.5 கோடி மதிப்புள்ள எனது நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் கமிஷனர் சந்தீப்பாய் ரத்தோர் உத்ரவின்படி ஆவடி மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது ராஜகுமாரி பக்கிரியிடம் அபகரித்த அந்த நிலத்தை ஆனந்த்ராஜ், ஜான் டேவிட் குமார் இருவரும் சேர்ந்து ராம்புரம் பகுதியை சேர்ந்த ராபி ஜெயக்குமார்(43) என்பவருக்கு விற்றது தெரியவந்தது. அவர் இந்த இடத்தை கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு விற்று உள்ளார். இவ்வாறு ராஜகுமாரி பக்கிரிக்கு தெரியாமல் 12க்கும் மேற்பட்டவர்களுக்கு அவரது நிலம் விற்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஆவடி மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஆனந்த்ராஜ், ஜான் டேவிட் குமார், ராபி ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதன் பிறகு அவர்களை திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்புக்கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.