போலி சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்து வந்த சித்த வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அத்திவெட்டி தெற்கு தெருவை சேர்ந்த தென்னரசு என்பவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் கிராம உதவியாளராக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய மகன் நேசன். நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததால் எனது மகனை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் பாரம்பரிய சித்த வைத்தியம் கிளினிக் நடத்தி வந்த விவேகானந்தர் நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன்.
அவரிடம் பலமுறை அழைத்துச் சென்றும் எனது மகனுக்கு கால்கள் சரியாகவில்லை. இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது குறித்த புகாரின் பேரில் மருத்துவக் கல்லூரி போலீசார் கார்த்திக்-கிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருடைய சான்றிதழ்கள் போலி என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.