தமிழக அரசின் போலி சான்றிதழ் அச்சிட்டு வழங்கிய ஆசாமிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தபால்துறை பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையமானது நடத்திய தேர்வில் கலந்துகொண்ட பலர் இந்த போலி சான்றிதழ் வழங்கி இருப்பதை தபால்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு மேற்கொண்டனர். இதில் தபால்துறை பணியில் சேர்ந்தவர்கள் அளித்த தமிழக பள்ளிக்கல்வி சான்றிதழ்கள் போலியானது என்று தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக நம் நாளிதழில் சென்ற வாரம் விரிவான செய்தி வெளியாகியது.
இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை, தபால் துறை மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் ரயில்வே, சி.ஆர்.பி.எப்., ஷிப்பிங் கார்ப்பரேஷன், சி.ஐ.எஸ்.எப்., எல்.ஐ.சி., ஆகிய பல்வேறு நிறுவனங்களில் போலி சான்றிதழ் அளித்து, ஆயிரக்கணக்கானோர் பணியில் சேர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையம் வழியே 2,000 நபர்களின் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சான்றிதழை போலியாக அச்சடித்த நிறுவனங்கள், டில்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் சான்றிதழ் ஒவ்வொன்றிற்கும் தலா 3-5 லட்சம் வரையிலும் பெற்று போலிசான்றிதழ் அச்சிட்டு வழங்கியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, சம்பந்தப்பட்ட ஆசாமிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.