உத்திரபிரதேசத்தில் 300 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான சாமியார் மகந்த் நகேந்திரகிரி மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
அலகாபாத்தில் அகில பாரத் அகாரா பரிஷித் அமைப்பின் தலைவர் மடாதிபதி நரேந்திர கிரி மூன்று நாட்களுக்கு முன்பு மர்மமாக மரணம் அடைந்தார். சாமியாருக்கு நெருக்கமான ஆனந்த் கிரி என்பவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. சாமியாருக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் ஆனந்த் கிரி செயல்பட்டு வந்ததாகவும் இதையடுத்து மர்ம மரணம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு முன்பு எழுதியிருந்த கடிதத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சீடர் ஒருவரிடம் மனவருத்தத்துடன் கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் அந்த கடிதம் போலியானது என்றும் நரேந்திர கிரி தலையில் காயம் இருந்ததாகவும் நிரஞ்சனி அகார அமைப்பின் தலைவர் ரவீந்திரபுரி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நரேந்திரரின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருந்த நிலையில் இந்த வழக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார்.