Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி நகை கொடுத்து புதிய நகைகள்…. மனைவிக்கு உதவி செய்த கணவர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையிலுள்ள ஒரு ஜூவல்லரியில் சென்ற 18ஆம் தேதியன்று 68 கிராம் பழைய நகைகளை கொடுத்து 6 சவரன் நகைகளை பெண் ஒருவர் வாங்கி சென்றார். அவர் சென்ற பிறகு கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன், அந்த நகையை சோதனை செய்தபோது அவை போலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பின் கடை மற்றும் வெளியேயிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய பெண், ஆண் ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த வாகன எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்டது குன்றத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த ஈஸ்வரி(36) என்பதும், அவரை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்தது அவரது கணவர் மோகன்குமார்(46) என்பதும் தெரியவந்தது. இவ்வழக்கில் மோகன்குமார் கைது செய்யப்பட்டார். இவர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் தலைமறைவாக உள்ள ஈஸ்வரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |