கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக கணேஷ் அவென்யூவில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(21) மற்றும் சையது நசீர்(22) என்பது தெரியவந்தது. இதில் பிரகாஷ்ராஜ் தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டப்படிப்பும், சையது தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டும் படித்தனர்.
ஆனால் இருவரும் தேர்தல் தோல்வி அடைந்ததால் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி மீண்டும் தேர்வு எழுதுவதற்காக காத்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு அறையில் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.