வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் வாலிப்பாறை பகுதியில் வருசநாடு சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோடாலியூத்து பிரிவு சாலையில் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து சீலமுத்தையாபுரம் மூலவைகை ஆற்றங்கரை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தும்மக்குண்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.