கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர்.
அப்போது சாக்குமூட்டையில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த நபர் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த விஜய்(22) என்பதும், கஞ்சாவை கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விஜயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.