காவலர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி வால்பாறை, சேக்கல் முடி, முடீஸ், காடம்பாறை உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியானது வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காவலர்களின் குடும்பத்தினர் எங்களுடன் இருந்து எங்கள் கணவன்மார்கள் பணி செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
ஏனெனில் கணவன் ஒரு பக்கமும் மனைவி மற்றும் பிள்ளைகள் வேறொரு பக்கமும் இருப்பதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், பிள்ளைகள் தந்தையின் மீது பாசப்பிணைப்பு இல்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினருக்கு குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும், நோந்து பணியில் செல்லும் காவலர்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசினார். அவர் காவலர்களின் குடும்பத்தினர் எந்த ஒரு சூழ்நிலையும் தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையை பழகிக்கொள்ள வேண்டும் எனவும், உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் கூறினார்.