சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்த ‘அயோத்தி தசரதனின் மகன் ராமனுக்கு’ காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
வாகன சோதனையின் போது பணியில் இருக்கும் காவல்துறையினர் சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். காவல்துறையினரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட நபர் தவறான பெயர், முகவரி போன்றவற்றை கொடுப்பார். ஆனால் அது கொஞ்சமாவது நம்பும் வகையில் இருக்கும். தற்போது அரங்கேறிய சம்பவம் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சடைய மங்கலத்தில் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்பொழுது சீட் பெல்ட் அணியாமல் வந்த வாலிபரின் காரை நிறுத்தி, அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர்.
பின்னர் அந்த நபரை அழைத்து பெயர், முகவரியை கூறும் படி கேட்டுள்ளார். அவரும் தன்னுடைய பெயர் ராமன் என்றும், எனது தந்தையின் பெயர் தசரதன் என்றும் கூறியுள்ளார். அதையும் எழுதிக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், எந்த ஊர்? என்று கேட்க அதற்கு சற்றும் யோசிக்காமல் அயோத்தி என்று கூறியுள்ளார். அதையும் அந்த சப்-இன்ஸ்பெக்டர் எழுதிக் கொண்டார். அந்த சீட்டை அவரிடம் நீட்டி 500 ரூபாய் வசூல் செய்தார். இதையெல்லாம் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த இன்னொரு செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் ‘போலீசை ஏமாற்றிய தசரதன் மகன் ராமன்’ என்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த மக்கள் அனைவரும் கேரள காவல்துறையினரை கிண்டல் செய்து வருகின்றனர்.