தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து சிலர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக வேனில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா வட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி கட்சியினுடைய கொடியை வேனில் கட்டி வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து அந்த வேன் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியாக சென்று கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சியின் நகர செயலாளர் புஷ்பராஜ் அந்த வேனை நிறுத்தி வேனில் கட்டியிருந்த கொடியை அகற்றும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதற்குப்பின் வேனில் இருந்து கொடியை அகற்றுவதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் கணேசன், இச்சம்பவம் இரு மாநில மக்களிடையே வன்மத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தென்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் புஷ்பராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட புஷ்பராஜை விடுவிக்க வலியுறுத்தியும், காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாததால் தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 35 பேரை கைது செய்துள்ளனர். இதற்குப்பின்னர் அவர்களை தேனி திருமணம் ஒன்றில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்துள்ளனர்.