திருடுவதற்கு திட்டம் தீட்டிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்துல்கலாம் குளம் பகுதியில் உள்ள கருவேல மர காட்டுக்குள் 5 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் வருவதை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடனடியாக 5 பேரையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி தெருவை சேர்ந்த முருகன், முகேஷ், புதுரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சதாம் உசேன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தங்கபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த அரிவாள், கத்தி, இரும்பு கம்பி, மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் 5 பேரும் வழிப்பறி, திருட்டு செய்வதற்கு திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.