போலீஸ்காரர் போல பேசி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. எனவே உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய போகிறோம் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த வாலிபர் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். உடனடியாக அந்த மர்ம நபர் தனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய வாலிபரும் 2 தவணையாக 20 ஆயிரம் ரூபாயை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் பாதிக்கப்பட்ட வாலிபர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்த மர்ம நபர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்(23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.