நாகப்பட்டினத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் காவல்நிலையத்திற்கு பிரதாபராமபுரம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதாபராமபுரம் பகுதியில் ஒரு புதரில் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 110 லிட்டர் சாரத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் மேலஈசனூர் பகுதியில் வசித்து வரும் அம்பேத்கர் என்பவர் தான் சாராய விற்பனையில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் புலிவலம் திருவாசல் பகுதியில் வசித்து வரும் சின்னான் என்பவரும் சாலையோரத்தில் 110 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். அந்த 110 லிட்டர் சாராயத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.