அதிகாரி போல ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறை அதிகாரி ஒருவர் வாகனங்களை வழிமறித்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கருவேலம்பட்டி- பெருங்குடி சாலையில் காவல்துறையினர் வாகனம் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அவரது பதில் காவல்துறையினருக்கு சந்தேகம் அளிக்கும் படியாக இருந்ததால் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்பின் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கருவேலம் பட்டியில் வசித்து வரும் கந்தமலை என்பது தெரியவந்துள்ளது. இவர் தன்னை காவல் துறை அதிகாரி போல் பாவனை செய்துகொண்டு திருமங்கலம் பெருங்குடி சாலையில் வரும் வாகனங்களை மறித்து பணம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. அதே நபர் உள்ளாட்சி தேர்தலையொட்டி மது கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். அவரிடமிருந்து மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவர் மீது மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.