புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன், 29 டெக் ஹேண்ட்லர் என மொத்தம் 431 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 14,787 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தொடங்கியது. இன்று முதல் 20 நாட்களுக்கு உடல் தகுதி தேர்வு நடக்க உள்ளது. அதில் மார்பளவு, உயரம், எடை, ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை ஏடிஜிபி ஆனந்த மோகன் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தேர்வு நடைபெற்று வருகிறது.
தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தலைமையகம் கூறியுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த தேர்வுகள் நடைபெறுவதாகவும், இந்த காவலர் தேர்வில் எந்த வித முறைகேடும் நடைபெற வாய்ப்பு இல்லை. அதனால் காவலர் தேர்விற்கு பணம் பெற்றிருப்பதாக புகார் வந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.