துறையூர் அருகே நாடக கம்பெனியில் போலீஸ் அதிகாரி உடையை வாடகைக்கு எடுத்து அதனை அணிந்து வந்து சகோதரியை மிரட்டி நில பத்திரத்தை அபகரிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சினிமாவில் வருவதைப் போன்று நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் தான் அரங்கேறி உள்ளது. நாடக கம்பெனி ஒன்றில் போலீஸ் உடையை வாடகைக்கு எடுத்த ராமஜெயம் என்ற இளைஞர் அதனை அணிந்து வந்து தனது சகோதரி வெண்ணிலாவிடம் உள்ள வீடு மற்றும் நிலப்பத்திரத்தை கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் தகராறில் ஈடுபட்ட சகோதரியை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தம்பியின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா மற்றும் ஊர் மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வெங்கடாசலபுரத்திற்கு வந்த உப்பிலியபுரம் போலீசார் போலீஸ் உடையில் வந்த இளைஞரிடம் விசாரணை செய்தனர். நாடக கம்பெனியில் போலீஸ் உடையை வாங்கி அணிந்து வந்த முரட்டு இளைஞன் ஒப்புக் கொண்டதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.