காட்பாடி அருகே போலீஸ் ஒருவர் தாக்கியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பிரம்மபுரம் காலனியில் வாழ்ந்துவரும் மதியழகன் என்பவரின் மகன் விஜய். விஜய் பிரம்மபுரம் ரயில்வே கேட் அருகே நேற்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து விஜயின் உடலை மீட்க முயன்றபோது அவரின் உறவினர்கள் விஜயின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை மீட்க விடாமல் தடுத்தார்கள்.
இதன்பின் உறவினர்கள் பிரம்மபுரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சுப்பிரமணி, போலீஸார்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் கூறியுள்ளதாவது, கெங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்த பொழுது ஒரு பெண் விஜய்யின் மீது போலீஸில் புகார் கொடுத்ததால் அங்கிருந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய்யை தாக்கியுள்ளார்.
இதனால் அவமானம் தாங்க முடியாமல் விஜய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின் அதிகாரிகள், விஜய் தற்கொலை சம்பவம் குறித்து புகார் அளியுங்கள். விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னரே சாலை மறியலை கைவிட்டார்கள். பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.