அமெரிக்காவில் போலீஸ் பிடியில் சிக்கி மேலும் ஒரு கருப்பினத்தவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றத்தற்கு பின்னர் காவல்துறையினரால் கருப்பினத்தவர் அதிக அளவில் கொல்லப்படுவது தொடர்கதையாக மாறி விட்டது. கடந்த மே மாதம் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற 46 வயதுடைய நபர் போலீஸ் பிடியில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டேனியல் என்ற 41 வயதுடைய நபர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த போது அவரின் சகோதரர் ஜோ கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி நியூயார்க் நகரில் போலீஸ் உதவியை நாடியுள்ளார். அப்போது தெருவில் ஆடையில்லாமல் ஓடிய டேனியலை போலீசார் தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அது தொடர்பான வீடியோவை காவல்துறையினர் வெளியிட தாமதம் ஆனதால், தற்போது டேனியல் சகோதரர் ஜோ அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ” எனது சகோதரருக்கு உதவி வேண்டிதான் நான் காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தேன். என் சகோதரரை கொலை செய்வதற்கு அல்ல” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி நியூயார்க் மாகாண அட்டார்னி ஜெனரல் கருத்துக் கூறுகையில், ” இந்த சம்பவம் ஒரு சோகமான நிகழ்வு. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கருப்பின மக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.