போலி அடையாள அட்டையை பயன்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஜெ.ஜெ.நகரில் அன்பு செல்வம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள சாலிகிராமம் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு இவரிடம் மர்மநபர் ஒருவர் வந்து தான் சப் இன்ஸ்பெக்டர் என கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து விடுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் வழக்கு பதியாமல் இருக்க முப்பதாயிரம் ரூபாய் தனக்கு தரவேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
மீண்டும் அடுத்தநாள் வந்து தான் கேட்ட பணத்தை அவர் சொல்லும் இடத்திற்கு வந்து தருமாறு கூறிவிட்டு மேலாளர் சட்டையில் இருந்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். இதனால் சந்தேகமடைந்த மேலாளர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனால் போலீஸார் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது எம்ஜிஆர் நகரை சேர்ந்த விஜயபிரதாபன்(26) என்பது தெரியவந்தது. அவர் போலியான அடையாள அட்டையைப் பயன்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து மேலாளரிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் விஜயபிரதாபனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் அவனிடம் இருந்த 400 ரூபாய், மோட்டார் சைக்கிள் ஒன்று உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள்.