சென்னை மாவட்டத்தில் உள்ள இரும்புலியூர் பகுதியில் முகமது அன்வர் உசேன் என்பவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 22-ஆம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் நாங்கள் திரிபுரா மாநில போலீசார். ஒரு வழக்கு சம்பந்தமாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இன்ஸ்பெக்டர் காரில் இருக்கிறார் என கூறி முகமது அன்வரை அழைத்துள்ளனர். அவர் நம்பி காரில் ஏறிய போது மர்ம நபர்கள் அவரது கண்ணை கருப்பு துணையால் கட்டி காரில் கடத்தி சென்றனர். இதனையடுத்து 5 லட்ச ரூபாய் தரவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சத்தில் தான் சேமித்து வைத்திருந்த 90 ஆயிரம் ரூபாய் பணத்தை முகமது அன்வர் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு தாழம்பூர் பகுதியில் அவர்கள் முகமதுவை இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து முகமது அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து கேளம்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படியாக வாகனத்தில் சுற்றித்திரிந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அல்காஸ்மியா, பெர்வெஜ் மியா, ஜலீல்மியா ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் தான் முகமது அன்வரை காரில் கடத்தியது தெரியவந்தது. பின்னர் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து 20 ஆயிரம் ரூபாய் பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகிவற்றை மீட்டனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.