கேரள மாநிலத்தில் உள்ள பனங்காடு பகுதியில் ஜவுளி வியாபாரியான அன்சார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக 29 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நண்பர்களான பஷீர், அபிலாஷ் ஆகியோருடன் காரில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். ஏற்கனவே புரோக்கர் ஒருவர் பெருந்துறையில் ஜவுளி கொள்முதல் செய்து தருவதாக அன்சாரிடம் தெரிவித்தார். அந்த புரோக்கர் கூறியபடி அன்சார் தனது நண்பர்களுடன் சரளை ஏறி கருப்பன் கோவில் அருகே வந்து நின்றார்.
அவர்கள் புரோக்கரின் வருகைக்காக காத்து கொண்டிருந்த போது போலீஸ் சீருடை அணிந்த 2 பேர், காக்கி நிற பேண்ட், வெள்ளை நிற சட்டை அணிந்த 2 பேர் என மொத்தம் 4 பேர் ஒரு காரில் வந்து இறங்கினர். அவர்கள் உங்களிடம் கருப்பு பணம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. எனவே நாங்கள் உங்களது பணத்தை எடுத்துக் கொண்டு பெருந்துறை காவல் நிலையத்திற்கு செல்கிறோம். நீங்கள் அங்கு வந்து முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என கூறினர். சிறிது நேரத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதனால் பதற்றமடைந்த அன்சார் தமிழ் தெரிந்த தனது நண்பர் ஒருவர் மூலம் பெருந்துறை காவல் நிலையத்திற்கு போன் செய்து விசாரித்தார். அப்போது யாரும் வந்து அன்சாரிடம் பணத்தை பறிமுதல் செய்யவில்லை என அவர்கள் கூறினர். இதனால் மோசடி கும்பல் தன்னை ஏமாற்றியதை அறிந்து அன்சார் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.