சென்னையில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் பயணம் செய்த இரண்டு பேர் 500 கிராம் கஞ்சா, ஒரு அரிவாள் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ரமேஷ் என்ற சுரேஷ்(28), பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(25) என்பதும் தெரியவந்துள்ளது. ரமேஷின் மீது ராஜமங்கலம், கண்ணகி நகர், மெரினா, துரைப்பாக்கம் காவல் நிலையங்களில் ஏற்கனவே கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோன்று விக்னேஷ் மீதும் மெரினா, பட்டினபாக்கம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் விசாரணைக்காக தலைமை செயலக காவல் நிலையத்தில் இருந்த விக்னேஷுக்கு நேற்று காலை வலிப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு மண்டல இணை கமிஷனர் பிரபாகரன், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன், உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் விக்னேஷின் இறப்பு குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் இன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.