போளூர் சட்டமன்ற தொகுதியில் சேத்துப்பட்டு, பெருமனல்லூர் ,களம்பூர், போளூர் ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. மலை மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், அரிசி உற்பத்திக்கு பெயர்பெற்ற களம்பூர், சிற்ப கலைஞர்கள் நிறைந்த முடையூர் கிராமம் இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும். கடந்த 1951 முதல் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் இதுவரை திமுக 6 முறையும், அதிமுக 3முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒருமுறை சுயேட்சை வேட்பாளரும், ஒருமுறை பொதுநலக் கட்சி வேட்பாளரும் வென்றுள்ளனர்.
கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.வி. சேகரன் வென்றுள்ளார். போளூர் தொகுதியில் மொத்தம் 2,49,101 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் பெண் வாக்காளர்களை அதிகமாகும். கரும்பு, நெல், மஞ்சள், மணிலா என முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் மக்கள் நிறைந்தது இத்தொகுதி. ஆனாலும் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாததால் வேலை தேடி மக்கள் வெளி இடங்களுக்கு செல்வது தொடர்கிறது.
இதற்கு தீர்வு காண தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், வேளான் கல்லூரி, செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை என கோரிக்கைகளை மக்கள் பட்டியலிடுகின்றனர். சிற்ப கலைஞர்கள் நிறைந்துள்ள முடையூர் கிராமத்தில் சிற்ப கல்லூரி அமைக்க வேண்டும். நலிந்த கலைஞர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது.
சேத்துப்பட்டில் அரசு கல்லூரி, போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும் என மக்களின் கோரிக்கைகள் நிகழ்கிறது. போளூர் ரயிலில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும், ஆற்றுமணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கைகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க கூட்டு குடிநீர் திட்டம், கலம்பூரில் அரசு உற்பத்தி பூங்கா, பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மக்கள் அடுக்குகின்றனர்.