இந்திய அஞ்சல்துறை நாட்டு மக்களுக்காக பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செய்துகொண்டிருக்கிறது. அத்துடன் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஆகவே வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில்தான் கூடுதல் நன்மைகள் கிடைப்பதால் பலரும் இத்திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அஞ்சல்துறை திட்டங்களின் வட்டி விகிதமும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. அந்த அடிப்படையில் 2022-2023 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களிலேயே மிகவும் முக்கியமான சிறுசேமிப்பு திட்டம் மற்றும் பொதுவான சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்போது உயர்த்தப்பட்ட வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பை பார்க்கலாம். அதாவது, தபால் அலுவலக சேமிப்புக்கணக்கு திட்டத்துக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி என்றும் புதியதாக கணக்கு தொடங்கும்போது குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 500 செலுத்த வேண்டும் என்றும் அதிகபட்ச வரம்பு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 வருட தொடர் வைப்புகணக்கிற்கு வருடத்திற்கு 5.8 சதவீத வட்டி எனவும் குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 100 செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டெபாசிட் கணக்குகளுக்கு 1, 2 மற்றும் 3 வருடகால வைப்புத் தொகைக்கு 5.5 சதவீத வட்டி விகிதம் எனவும் 5 ஆண்டுகால வைப்புத்தொகைக்கு 6.7 சதவீத வட்டிவிகிதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் என்றும் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு வருடத்திற்கு 6.6 சதவீத வட்டி விகிதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.