வங்கிகள் முதல் தபால் அலுவலகங்கள் வரையிலும் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் எதிர் காலத்தைப் பாதுகாக்க தேர்ந்தெடுக்கக்கூடிய குறிப்பிட்ட முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் பல இருக்கிறது. இதுபோன்ற திட்டங்களை அரசாங்கமும் ஊக்குவிக்கிறது. பெண் குழந்தைகளின் கல்வி செலவு துவங்கி அவர்களின் எதிர்காலச் செலவுக்கு கைக் கொடுக்கும் இது போன்ற திட்டங்களை பெற்றோர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளின் சேமிப்புக்கு கை கொடுக்கும் திட்டம் பற்றி பார்க்கலாம்.
தபால் அலுவலக சேமிப்புகணக்கு
பெண் குழந்தை வங்கி சேமிப்புக்கணக்கைப் போன்றே தபால் அலுவலக சேமிப்புக் கணக்கும் 4 சதவீதம் வட்டி விகிதத்துடன் வருகிறது. 10 வயதுக்கு குறைவான பெண்குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு இது விரும்பத்தக்கது ஆகும். இவற்றில் முதலீடு செய்வதற்கு அதிகபட்சம் வரம்பு இல்லையென்றாலும், குறைந்தபட்சம் வரம்பு ரூபாய்.500 மட்டுமே ஆகும். ஒருவர் குறைந்தபட்ச இருப்புத்தொகையான ரூபாய்.50 பராமரிக்க வேண்டும் மற்றும் எந்நேரத்திலும் அந்தத் தொகையை எடுக்கலாம்.
பொது வருங்கால வைப்புநிதி
இது பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத்திட்டம் ஆகும். இவற்றில் 7.1 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் வைப்பு வரம்பு ரூபாய்.500. பெற்றோர் (அல்லது) பாதுகாவலரை சார்ந்திருக்கும் குழந்தைகள் அவசரதேவை, உயர்கல்வி தேவை இருந்தால் 5 வருடங்களுக்கு பின் கணக்கை முன்கூட்டியே மூடி பணத்தை எடுக்கலாம்.
தொடர்வைப்பு (RD)
இது பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத்திட்டங்களில் ஒன்றாகும். இவற்றில் பெற்றோர்கள் மாதந்தோறும் ஒரு சிறுதொகையை டெபாசிட் செய்யலாம். 5 வருடங்கள் வரை தொடரலாம். அத்துடன் வட்டிவிகிதம் ஆண்டுக்கு 5.8 சதவீதம் ஆகும். மேலும் குறைந்தபட்சம் டெபாசிட் வரம்பானது ரூபாய்100 மற்றும் திட்டம் முழுமையாக முடிவதற்குள் பணத்தை எடுக்க இயலாது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
பெண் குழந்தைகளுக்குரிய பிரபலமான திட்டங்களில் இதுவும் ஒன்று. 2 பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர், குழந்தைகள் 10 வயதை அடையும்வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 7.6 சதவீத வட்டி விகிதத்தில், குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூபாய் 1,000மற்றும் அதிகபட்ச வரம்பு ரூபாய் 1.5 லட்சம். முதலீட்டாளர்கள் தங்களது குழந்தைக்கு 18 வயதாகும் வரை தொகையைத் திரும்பப்பெற முடியாது. குழந்தைக்கு 21 வயதான பின் இத்திட்டம் முதிர்வுப் பலன்களை வழங்குகிறது.
கிசான் விகாஸ்பத்ரா
பெண் குழந்தைக்கான அஞ்சல் அலுவலக திட்டங்களில் உத்தரவாத வருமானத்துடன் வரக்கூடிய அஞ்சல் அலுவலக திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் வைப்புத்தொகை ரூபாய் 1,000 மற்றும் லாக்-இன் நேரம் 30 நாட்கள் ஆகும். வட்டி விகிதங்கள் வரிக்கு உட்பட்டவை என்பதால், பெற்றோர்கள் முதலீடு செய்வதற்கு முன் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
தபால் அலுவலக நேர வைப்புகணக்கு
இத்திட்டமானது குறைந்தபட்ச வைப்புத் தேவை ரூபாய் 1,000 உடன் தொடங்குகிறது. முதலீட்டாளர்கள் முதலீடுசெய்து நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வைப்பாளர்கள் வட்டியை 5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டமாகவும் மாற்றலாம். இத்திட்டத்தில் பெற்றோர்கள் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்போது வரி விலக்குகளின் பலனை வழங்குகிறது. ஆகவே மேற்கண்ட போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் முதலீடு செய்யலாம். சில குறிப்பிட்ட திட்டங்களில் வயதை பொறுத்து பெண் குழந்தைகளே நேரடியாக தங்களது சேமிப்பை தொடங்கலாம். அவர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள், மூத்தகுடிமக்கள் அனைவருமே இத்திட்டங்களில் முதலீடு செய்ய தகுதியானவர்கள் ஆவர்.