போஸ்ட் ஆபிஸ் சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதை மக்கள் பலரும் பாதுகாப்பானதாக நினைக்கின்றனர். அத்துடன் இதில் முதலீடு செய்வது லாபமானதாகவும் உள்ளது. மியூச்சுவல் பண்டுகளில் செய்யும் முதலீடு உங்களுக்கு பலனை தந்தாலும் அது பாதுகாப்பானதல்ல. ஆனால் போஸ்ட்ஆபீஸ் வழங்கும் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது ஆகும். அரசாங்கத்துக்கு சொந்தமான இந்நிறுவனமானது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இச்சேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களின் எதிர்கால நிதிசிக்கல்களை சமாளித்துக் கொள்ள முடியும்.
இதன் சிறப்பான சேமிப்புத் திட்டங்களில் ஒன்று ரெக்கரிங்டெபாசிட் ஆகும். இவற்றில் நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு நல்ல லாபம் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸின் ஆர்டி திட்டத்தில் நீங்கள் குறைந்தப்பட்சம் வெறும் ரூபாய்.100 முதலீடு செய்யலாம் மற்றும் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்ததிட்டத்தில் நீங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு ஆண்டு, 2 வருடங்கள் (அல்லது) அதற்கு மேற்பட்ட காலத்திற்கு முதலீடு செய்துகொள்ளமுடியும். இதில் ஒவ்வொரு காலாண்டிலும் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வட்டியானது கிடைக்கும்.
ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் வட்டித்தொகை மற்றும் கூட்டுவட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போது இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 5.8 % வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நீண்டகாலம் முதலீடு செய்தால் திட்டத்தின் முதிர்வில் லட்சக் கணக்கில் பணத்தை பெறலாம். அத்துடன் இந்த திட்டத்தில் 18 வயது (அல்லது) அதற்கு மேற்பட்டவர்களும் கணக்கை தொடங்கி கொள்ளலாம். மாதந்தோறும் இந்த திட்டத்தில் ரூபாய்.10,000 முதலீடு செய்தால் 10 வருடங்களுக்கு பின் ரூபாய்.16 லட்சம் கிடைக்கும்.
அதன்படி மாதந்தோறும் ரூபாய்.10,000 டெபாசிட் செய்யும் போது அது ஒரு வருடத்தில் ரூபாய்.1,20,000 ஆக வரும். இவற்றில் நீங்கள் 10 வருடங்கள் முதலீடுசெய்ய வேண்டும். அந்த 10 வருடங்கள் முடிவில் ரூபாய்.12,00,000 ஆக உங்கள் முதலீடு இருக்கும். பிறகு திட்டம் முதிர்வடைந்ததும் ரூ.4,26,476 கிடைக்கும். இதன் வாயிலாக 10 ஆண்டுகளுக்கு பின் மொத்தம் ரூபாய்.16,26,476 கிடைக்கும். இத்திட்டத்தில் 12 தவணைகள் நீங்கள் கட்டும் பட்சத்தில் மொத்த தொகையில் 50% கடனாக பெறலாம்.