கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின், வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வலது மூட்டு பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்ச்சி இழந்ததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது கால் வீங்கியிருந்தது. எனவே உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரின் வலது காலை அகற்றினர். பிரியாவின் கால் அகற்றப்பட்டதற்கு காரணம் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறாக தவறான சிகிச்சை தான் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையை சேர்ந்த 2 மருத்துவமர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியாவின் உடல்நிலை மோசமான நிலையில் நேற்று முன்தினம் காலை 7:15 மணியளவில் உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், மேலும் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
இந்த சூழலில் இன்று காலை சென்னை வியாசர்பாடியில் இருக்கும் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த பிரியாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் உயிரிழந்த சகோதரருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையையும், ரூபாய் 10 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார். மேலும் அரசு சார்பாக வீடு ஒதுக்கிய ஆணையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதோடு அந்த வீட்டில் இருந்த பிரியாவின் பதக்கங்கள், சான்றிதழ்கள் அனைத்தையும் பார்வையிட்டார். முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் – நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு!. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது.” என்று தெரிவித்துள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது. (2/2) pic.twitter.com/kfNzP0LRqn
— M.K.Stalin (@mkstalin) November 17, 2022