ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூடூத் ஹெட் போன் வெடித்து 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு நகரம் உதைப்புரியா என்ற கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ராகேஷ் குமார். இவர் போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனால் செல்போனை பயன்படுத்தும் போது ப்ளூடூத் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு செல்போனில் பாடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பாடம் படித்துக் கொண்டிருந்த போது ப்ளூடூதில் மின்சாரம் பாய்ந்து வெடித்தது. இதில் ராகேஷ்குமாரின் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையின்போது அவர் மரணமடைந்தார். சிகிச்சை அளித்த போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் செல்போனில் ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.