ப்ளூ காய்ச்சல் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவிய நிலையில், காலாண்டு தேர்வை காரணம் காட்டி மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகளிடையே பரவி வரும் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஓபிஎஸ், மாணவர்களின் நலன் கருதி தொடக்கப் பள்ளிகளுக்கு (1 முதல் 5ம் வகுப்பு வரை) விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோன்று H1N1, இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் சிறுவர்களுக்கு எளிதில் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று, ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரை தொடர்ந்து தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் வேண்டுகோள் விடுத்துள்ளார். காய்ச்சலை தடுக்க போர்கால அடிப்படையில் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், மக்களின் அச்சத்தை போக்கி உரிய மருத்துவ உதவிகளை உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.