தற்கொலை செய்து கொண்ட மகனின் சடலத்துடன் தாய் 3 நாட்கள் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் வள்ளி நகரில் சுப்பிரமணியம்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட வசந்தா என்ற தாய் இருந்துள்ளார். நேற்று முன் தினம் சுப்ரமணியத்தின் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்துடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சுப்பிரமணியம் தூக்கில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சடைந்தனர். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் இறந்து மூன்று நாட்கள் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றொரு அறையில் வசந்தா மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் மூதாட்டியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, நடக்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி மகன் இறந்தது தெரியாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் 3 நாட்களாக மூதாட்டி உணவு சாப்பிடவில்லை. இதனால் அவர் மயங்கி கிடந்தார். சுப்பிரமணியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.