ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மூர்த்தி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அம்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரங்கசாமி(27) என்ற மகனும், ரங்கநாயகி(24) ஸ்ரீதேவி(20) என்ற மகள்களும் இருக்கின்றனர். நேற்று சத்தியமங்கலம் அருகே இருக்கும் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வைத்து ரங்கசாமிக்கும் கோகிலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் நல்லகவுண்டன்பாளையம் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மூர்த்தியும் அவரது மகள் ரங்கநாயகியும் கோவிலில் மற்ற வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு மாலை நேரத்தில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கொடிவேரி பிரிவு அருகே சென்றபோது ரங்கநாயகியிடம் மூர்த்தி நெஞ்சுவலிப்பதாக கூறிக்கொண்டே ஸ்கூட்டரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். அதற்குள் நிலைதடுமாறிய ஸ்கூட்டர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மூர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ரங்கநாயகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.