மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பணப்பட்டி கிழக்கால தோட்டம் பகுதியில் விவசாயியான அகிலப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் கல்லாங்காடு புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக ராஜ் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
இதனால் நிலைதடுமாறி தாய் மகன் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.