திடீரென ஆம்னி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மெய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஹரிஹரன் என்ற மகன் இருக்கிறார். இவருடைய மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மெய்யப்பன் தன்னுடைய மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆம்னியில் சென்றுள்ளார். இதனையடுத்து மெய்யப்பன் தன்னுடைய மகனை வண்டியில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பும்போது திடீரென வண்டியில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மெய்யப்பன் தன்னுடைய மகனை ஆம்னியில் இருந்து இறக்கிவிட்டு தானும் கீழே இறங்கி விட்டார். அப்போது ஆம்னி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் ஆம்னி தீயில் எரிந்து சேதமானது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.