மகனை காப்பாற்ற முயன்ற போது தண்ணீரில் மூழ்கி தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மாணிக்க விநாயகர் கோவில் தெருவில் பிரபுதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஜோஸ்வா பிரின்ஸ், டேனியல் பிரின்ஸ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபுதாஸ் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளத்திற்கு சென்றுள்ளனர் இதனையடுத்து திருவட்டார் அருவிக்கரை அணைக்கட்டு பகுதியான பரளியாற்றில் ஜோஸ்வா பிரின்ஸ் குளிப்பதற்காக இறங்கியுள்ளார்.
அப்போது சிறுவன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபுதாஸ் தனது மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் இறங்கியுள்ளார். நீண்ட நேரம் போராடி தனது மகனை கரையில் தள்ளி விட்ட பிறகு பிரபுதாசால் தண்ணீரில் இருந்து வெளியே வர இயலவில்லை. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பிரபு தஸை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரபுதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.