தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன் பால்குடி பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நெவுலி கண்மாயில் குளிப்பதற்காக ஸ்டாலின் தனது மூன்று வயது மகன் நிதிஷை அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி தண்ணீருக்குள் விழுந்த நிதிஷை ஸ்டாலின் காப்பாற்ற முயன்ற போது இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஸ்டாலினை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.