கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு பகுதியில் கொத்தனாரான விஜய்(23) என்பவர் தனது தாய் பாஞ்சாலியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் விஜய் செவிலிமேடு பெட்ரோல் நிலையம் எதிரே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மகன் தன்னை பார்க்க வராததால் பாஞ்சாலி அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது ரத்த காயங்களுடன் விஜய் இறந்து கிடப்பதை பார்த்து பாஞ்சாலி அதிர்ச்சடைந்தார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விஜய்யின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.