தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(16) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத சஞ்சய் டுடோரியல் மையத்தில் சேர்ந்து படித்து வருகிறார். அதே பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சம்பத்குமாரின் மகன் சஞ்சய்(17) என்பவரும் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் பாலாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையில் மகன்களை காணாமல் தேடி அலைந்த பெற்றோர் ஆற்றின் கரையோரம் உடைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். பின்னர் 2 பேரில் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.