மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவஆனந்த மணி தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவ ஆனந்தமணி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சிவஆனந்த மணிக்காக இறுதி சடங்கை செய்து கொண்டிருந்த அவரது தந்தை கணேசன் மகன் இழப்பை தாங்க முடியாமல் வேதனையில் அழுது கொண்டிருந்தார். அதன் பின் இறுதி சடங்கை முடித்து வீட்டிற்கு நடந்து வந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கணேசன் மருத்துவமனைக்கு வரும் வழியில்லை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மகன் இறப்பினால் சோகம் தாங்க முடியாமல் தந்தையும் உயிரிழந்த சம்பவம் மிக பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.