பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். சமீபத்தில் இவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து ஷாருக்கான் பைஜூஸ் கல்வி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். இதற்காக பைஜூஸ் நிறுவனம் ஆண்டுதோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் ஷாருக்கானுக்கு பணம் செலுத்தி வருகிறது.
மேலும் சில ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் ஏற்படுத்திய சர்ச்சையால், ஷாருக்கானுடன் தொடர்புகொள்ள பைஜூஸ் நிறுவனம் விரும்பவில்லை என்றும், அவருடனான விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பைஜூஸ் நிறுவனம் ஷாருக்கானை முழுமையாக கைவிட்டுவிட்டதா? அல்லது விளம்பர தூதுவராக அவர் தொடர்கிறாரா? என்பது தெரியவில்லை.