மகன் ஒருவர் தன் பெற்றோர்களிடமிருந்து பணம் மற்றும் நகையை பறித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே தர்மத்துப்பட்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் பம்பையன்(70) – ராமுத்தாய்(65). இவர்களுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன நிலையில் இருவரும் கூலி வேலை பார்த்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய மகன் புவனேஷ் என்பவர் தந்தை மற்றும் தாய் இருவரையும் தானே பார்த்துக் கொள்வதாகக் கூறி வீட்டை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். ஆனால் அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் எந்த உதவியும் செய்யாமல் புவனேஷ் இருந்துள்ளார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவலிப்பதாக பெற்றோர் கூறியதால், அவர்களுக்கு தலைவலி மாத்திரை என்று பொய் சொல்லி தூக்க மாத்திரையை புவனேஷ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மயங்கிய நிலையில் இருந்த தன் அம்மாவின் கழுத்தில் இருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த பணத்தை புவனேஷ் திருடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இனி நீங்கள் என் வீட்டில் இருக்கக்கூடாது. இந்த வீடு எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சொல்லி வீட்டைவிட்டுப் அவரை துரத்தியுள்ளார். தங்களுக்கு நேர்ந்த இந்த கொடுமையை வயதான தம்பதிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “எங்களை ஏமாற்றி எங்கள் மகன் நகை மற்றும் பணத்தை எடுத்து விட்டு எங்களையும் விரட்டி விட்டார். மேலும் அவரிடமுள்ள எங்கள் பணத்தை மீட்கவும், எங்கள் வீட்டின் பத்திரத்தை ரத்து செய்யவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.