தந்தை மகனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சேகவுண்டன் புதூரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜி(18) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் ஒரே அறையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது பால்பாண்டி தனது மகனை தள்ளி படுத்து தூங்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் தூக்க கலக்கத்தில் இருந்த விஜி தள்ளி போகாமல் அதே இடத்தில் தூங்கியதால் கோபமடைந்த பால்பாண்டி அருகில் இருந்த கத்தியால் தனது மகனின் மார்பில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த விஜியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து விஜி கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பால்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.