மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகையை பறித்து சென்ற ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் எஸ்.எஸ்.வி கோவில் தெருவில் சரோஜா(75) என்பவர் வசித்து வருகிறார். நேற்று சரோஜா அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர் சரோஜாவிடம் “உங்களது மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. உங்களை கூப்பிட தான் வந்தேன். ஆட்டோவில் ஏறுங்கள்” என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சரோஜா ஆட்டோவில் ஏறியுள்ளார்.
அங்கிருந்து 3 தெரு தாண்டி சென்றதும் அந்த நபர் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 10 கிராம் தங்க கம்மலை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் மூதாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.